10 மாதம் காத்திருந்து குழந்தையை காண முடியாமலே உயிரிழந்த ராணுவ வீரர்..!
எத்தனையோ படங்களில் நாம் பார்த்திருப்போம். ஒரு உயிர் போகும் போது ஒரு சிசு மண்ணில் உதிப்பது போன்ற காட்சிகளை. இதனை சாதாரணமாக கடந்திருந்த நம்மால், இந்த செய்தியை அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நாயக் ரஞ்சித் சிங் உள்ளிட்ட 4 இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் சமீபத்தில் பலியாகினர். ரஞ்சித் சிங் உயிரிழக்கும் அந்த நேரத்தில் அவரது மனைவி ஷிமு தேவி நிறைமாத கர்ப்பிணி. இன்றோ, நாளையோ நம் வாரிசு வந்துவிடும் என காத்திருந்த ரஞ்சித் சிங்கிற்கு மரணமே மிஞ்சியது. தனது வாரிசை காணாமலே இவ்வுலகத்தை விட்டு மறைந்துவிட்டார்.
Read Also -> 'சபரிமலை கோவிலில் தந்திரிகளுக்கும் உரிமை இருக்கிறது'
இதனையடுத்து முழு ராணுவ மரியாதையுடன் ரஞ்சித் சிங்கின் உடல் அவரது சொந்த வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அந்த நேரத்தில்தான் அங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் ஷிமு தேவி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தந்தை மரண ஊர்வலம் வீடு நோக்கி வந்துக் கொண்டிருக்க மகளோ மருத்துவமனையில் அழுகையும், ரத்தமுமாய் பிறந்துள்ளார். இதனையடுத்து எப்படியும் தனது கணவரை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என ஷிமா தேவி துடித்திருக்கிறார். இதனால் ஆம்புலன்ஸ் மூலம் தனது பச்சிளம் குழந்தையுடன் அழைத்து வரப்பட்ட ஷிமா தேவி, ரஞ்சித் சிங்கின் உயிரற்ற உடலை கண்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். பின்னர் ரஞ்சித் சிங்கின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Read Also -> விமானத்தில் அத்துமீறிய இளைஞர்.. உஷாரான இளம்பெண்..!
ரஞ்சித் சிங் நாட்டின் மீது கொண்டுள்ள தீராத காதலால் கடந்த 2003-ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்துள்ளார். மனைவியின் பிரசவத்தையொட்டி விடுமுறை எடுக்க திட்டமிருந்த நிலையில் துரதிஷ்டவமாக அவர் உயிரிந்ததுள்ளார் என்பது வேதனைக்குரிய விஷயமாக அமைந்துள்ளது.