வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் மருத்துவமனை - பீகாரில் நோயாளிகள் அவதி
பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மருத்துவமனைகள் கூட வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன.
பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 20க்கும் மேற்பட்டோர் கடந்த மூன்று நாட்களில் மட்டும் உயிரிழந்துள்ளனர். பகல்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாட்னாவிலுள்ள மருத்துவமனைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கார்தனிபாக் மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், நோயாளிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். முடிந்த அளவிற்கு நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை கொட்டி தீர்க்கப்பட்டு வரும் நிலையில், மேலும் சில தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், செவ்வாய்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.