'வெட்கக்கேடு': பிரதமர் வருகைக்காக அவசர அவசரமாக தயாரான மருத்துவமனை -எதிர்கட்சிகள் கண்டனம்

'வெட்கக்கேடு': பிரதமர் வருகைக்காக அவசர அவசரமாக தயாரான மருத்துவமனை -எதிர்கட்சிகள் கண்டனம்
'வெட்கக்கேடு': பிரதமர் வருகைக்காக அவசர அவசரமாக தயாரான மருத்துவமனை -எதிர்கட்சிகள் கண்டனம்

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மோர்பி அரசு மருத்துவமனைக்கு பிரதமர் மோடியின் வருவதை முன்னிட்டு, மருத்துவமனையில் புதுப்பிக்கும் பணிகள் அவசர அவசரமாக நடந்தது.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த தொங்கு பாலம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அறுந்து விபத்துக்குள்ளானதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மோர்பி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியை பிரதமா் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் பாா்வையிட உள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்து மோர்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் நேரில் சந்தித்து மோடி நலம் விசாரிக்க உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி இந்த மருத்துவமனைக்கு நேரில் வர உள்ளதால், மருத்துவமனையை புதுப்பிக்கும் பணிகள் நேற்றிரவு அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டன. அழுக்கு படிந்த இருக்கைகள், படுக்கைகள், கழிவறைகள் என அனைத்தையும் மாற்றியமைத்து, மருத்துவமனை வளாகத்தை வர்ணம் பூசி பொலிவுபடுத்தும்  பணியில் விடிய விடிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி வருகைக்காக மருத்துவமனையை அவசர அவசரமாக தயார்படுத்துவதை காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஹேமங் ராவல் கூறுகையில், "பால விபத்தில் நிறைய மக்கள் உயிரிழந்து மொத்த மாநிலமும் சோகமயமாக காட்சியளிக்கும் நிலையில் பாஜகவினரோ ஏதோ விழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கக்கேடு'' என்று விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மியின் டெல்லி எம்எல்ஏ நரேஷ் பல்யான், "வெட்கமின்மைக்கும் ஒரு எல்லை உண்டு" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே: குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்து: பாஜக எம்.பி.யின் 12 உறவினர்களும் உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com