தாறுமாறாக சாலையில் ஓடிய கார்; 4 பேர் படுகாயம் - ஒருவர் கைது
ஆந்திராவில் தாறுமாறாக கார் ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்திய மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கே.ஐ.எம்.எஸ் மருத்துவமனையின் எதிரே சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்தக் கார் தாறுமாறாக ஓடி எதிரே வந்த இருசக்கர வாகனத்தை தூக்கி எறிந்தது. மேலும் அங்கிருந்தவர் சிதறியடுத்து ஓடினர். இதையடுத்து அங்கிருந்த இரண்டு ஆட்டோவின் மீது மோதி கார் நின்றது. இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் காரை முற்றுகையிட்டு கார் ஓட்டுநரை பிடித்தனர்.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பொம்மா ஷிவ் பிரதாப் ரெட்டி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”விபத்தில் யாரும் இறக்கவில்லை. ராமகிருஷ்ணா, சரிதா, தேவசேனாம்மா, லட்சுமி ஆகிய 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கிறது” என தெரிவித்தனர்.