அரசு தகவல்கள் கசிகிறதா?: கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த மத்திய உள்துறை அமைச்சகம்
அரசு தகவல்கள் கசிவதையும், திருடப்படுவதையும் தடுக்கும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் விதித்துள்ளது.
இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சர்வர்களை, வெளிநாட்டு நிறுவனங்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 30 முறை ஊடுருவ முயற்சித்து தகவல்களை திருட முயல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், அமித் ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம், தகவல்கள் திருட்டை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் 24 பக்க உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி அரசின் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள், ஆலோசகர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவில் அரசுக்காக பணியாற்றும் வெளிநபர்கள், அரசின் எவ்வித தகவலையும் சமூகவலைதளங்களில் வெளியிடக்கூடாது.
அரசு அலுவலக கணினி மற்றும் மொபைல் போன்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அரசு தொடர்பான ரகசிய தகவல்கள் எதுவும், Google Drive, Drop Box, iCloud உள்ளிட்ட தனியார் சேமிப்பு மையங்களில் சேமித்துவைக்கக் கூடாது. அவ்வாறு செய்யும் நபர்கள் குற்றவியல் நடவடிக்கை உட்படுத்தப்படுவர்.
ரகசிய தகவல்களை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பென் டிரைவ் உள்ளிட்ட சேமிப்பு கருவிகளில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும். அவ்வாறு சேமித்து வைக்கப்படும் கருவிகளை உரிய அனுமதியின்றி எக்காரணத்தைக் கொண்டும், வெளியே எடுத்துச் செல்லக் கூடாது. ரகசிய தகவல்களை எதையும், மின்னஞ்சல்கள் மூலம் கண்டிப்பாக அனுப்பக் கூடாது. அதிகாரபூர்வ அரசு இ-மெயில் முகவரியை பொது WiFi-யில் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது