‘காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள்’மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை
தங்கள் மாநிலங்களில் படிக்கும் காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு, மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நேற்றுமுன்தினம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஜைஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே நேற்று ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதலை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு அறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அதில், தங்களது மாநிலங்களில் தங்கி படிக்கும் காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருக்கும் காஷ்மீர் மாணவர்களுக்கு அச்சுறுத்தலிருப்பதாக தகவல் வந்ததால் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவுரையை வழங்கியுள்ளது.
இதனிடையே, பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாட்டின் முக்கிய புலனாய்வு அமைப்பான் ரா, உளவுத்துறை அமைப்பு அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.