‘திருமண விவகாரத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்களின் ஃபார்முலாவை பின்பற்றவேண்டும்’-அசாம் எம்பி

‘திருமண விவகாரத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்களின் ஃபார்முலாவை பின்பற்றவேண்டும்’-அசாம் எம்பி
‘திருமண விவகாரத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்களின் ஃபார்முலாவை பின்பற்றவேண்டும்’-அசாம் எம்பி

தங்களது குழந்தைகளின் திருமண விவகாரத்தில் இஸ்லாமியர்களின் ஃபார்முலாவை இந்துக்கள் பின்பற்ற வேண்டும் என்று அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவருரும் (All India United Democratic Front - AIUDF), அசாம் எம்.பி.யுமான பத்ருதீன் அஜ்மல் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அளித்துள்ளப் பேட்டியில், “இஸ்லாமிய ஆண்கள் 20-22 வயதிலும், பெண்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வயது வரம்பான 18 - 20 வயதிலும் திருமணம் செய்துக்கொள்கிறார்கள். இதனால் அதிகளவிலான குழந்தைகளை இஸ்லாமியர்கள் பெற்றுக்கொண்டு அவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறது. அதேநேரத்தில் இந்துக்கள் சரியான வயதில் திருமணம் செய்துக்கொள்வதில்லை. இதனால் திருமணத்திற்கு முன்பு ஒன்று முதல் மூன்று வரையிலான தொடர்புகளை சட்டத்திற்கு புறம்பாக வைத்துக் கொள்கிறார்கள்.

திருமணம் செய்துக்கொள்ளாததால் அவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளமாட்டார்கள், பணத்தை சேமித்து வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 40 வயதிற்குப் பிறகு, பெற்றோரின் அழுத்தத்தின் காரணமாக இந்துக்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் 40 வயதிற்குப் பிறகு குழந்தைகளை அவர்கள் பெற்றுகொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?. வளமான நிலத்தில் விதைத்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்போதுதான் வளர்ச்சி இருக்கும்.

இந்துக்களும் இஸ்லாமியர்களின் ஃபார்முலாவைப் பின்பற்றி, தங்கள் மகன்களுக்கு 20-22 வயதிலும், அவர்களின் பெண் குழந்தைகளுக்கு 18-20 வயதிலும் திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படி செய்தால் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று மட்டும் பாருங்கள். அப்போது இந்துக்களின் சமூகத்திலும் அதிக மக்கள் தொகை இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஆஃப்தாப் பூன்வாலாவால், ஷிரத்தா வால்கர் 35 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்டது குறித்து, அஸ்ஸாம் மாநிலத்தின் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மாவின் ‘லவ் ஜிகாத்’  கருத்துக்கு பதிலளித்துள்ளார். அதில் அவர், “இன்று நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் முதல்வர். எனவே, அவரைத் தடுப்பது யார்?. நீங்களும் நான்கைந்து 'லவ் ஜிகாத்' நடத்தி எங்களது இஸ்லாமியப் பெண்களை அழைத்துச் செல்கிறீர்கள். நாங்கள் அதை வரவேற்போம், சண்டையிட மாட்டோம்” என்று அஜ்மல் கூறியுள்ளார். 

அசாம் எம்.பி. அஜ்மலின் இந்தக் கருத்துக்கு அம்மாநிலத்தை ஆளும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அம்மாநில பாஜக எம்.எல்ஏ.வான டி. கலிட்டா கூறியுள்ளதாவது,  “இப்படிச் சொல்வதன் மூலம் உங்கள் தாய், சகோதரி மீது குற்றச்சாட்டுகளை வைக்கிறீர்கள். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், இங்கே இதை செய்ய வேண்டாம். வேண்டுமானால் வங்கதேசத்திற்கு சென்று அங்கே இந்த மாதிரி செய்யுங்கள் என்று எச்சரிக்கிறேன். இந்துக்கள் இதை ஏற்க மாட்டார்கள். அரசியலுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக செல்லாதீர்கள். உங்கள் தாய் மற்றும் சகோதரிகளின் கண்ணியத்தை மிதிக்காதீர்கள்,

நீங்கள் ஒரு இஸ்லாமியர், நாங்கள் இந்துக்கள். நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமா?. இது ராமர் மற்றும் சீதா தேவியின் நாடு. வங்கதேசத்து ஆட்களுக்கு இங்கு இடமில்லை. இஸ்லாமியர்களிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை” என்று காட்டமாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com