இந்துக்கள் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஹரித்வார் மடாதிபதி பேச்சால் சர்ச்சை!
இந்துக்கள் குறைந்தது 4 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஹரித்வார் பாரத் மாதா கோயிலைச் சேர்ந்த மடாதிபதி கோவிந்த தேவ் கிரிஜி மகராஜ் கூறினார். இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளின் சார்பில் மாநாடு ஒன்று நடந்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உட்பட பலர் கலந்துகொண்டுள்ள இம்மாநாட்டில் ஹரித்வார் பாரத் மாதா கோயிலைச் சேர்ந்த மடாதிபதி கோவிந்த தேவ் கிரிஜி மகராஜும் கலந்துகொண்டார்.
அவர் பேசும்போது, ‘இந்து மக்கள் தொகை குறைந்த இடங்களில் தங்கள் பகுதிகளை இழந்துள்ளோம். இனியும் அது தொடரக்கூடாது. அதனால், இந்துக்கள் நான்கு குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் வரை, இதை தொடர வேண்டும். இரண்டு குழந்தை சட்டம், இந்துக்களை கட்டுப்படுத்தக் கூடாது. பசு பாதுகாவலர்கள் அமைதியை விரும்புவர்கள். ஆனால், குற்றப் பின்னணி உடைய சிலர் இந்த அமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தி, குற்றச் செயல்களை செய்கின்றனர். தங்கள் சொந்த பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள பசு பாதுகாவலர்கள் என்ற பெயரை பயன்படுத்துகின்றனர்’ என்றார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.