‘சந்திரயான் 2’ வெற்றி பெற இந்து, இஸ்லாமிய மத குருக்கள் பிரார்த்தனை
‘சந்திரயான் 2’ மீண்டும் விக்ரம் லேண்டருடன் தொடர்பை பெற்று வெற்றி பெற வேண்டும் என இந்து, இஸ்லாமியர்கள் மத குருக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விக்ரம் லேண்டரை நேற்று சந்திரயான் 2 ஆர்பிட்டர் கண்டறிந்து புகைப்படம் எடுத்தது. லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அதிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்தது.
இதையடுத்து விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க சந்திரயான் 2 ஆர்பிட்டரை நிலவின் 100 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரப் பாதையிலிருந்து, 50 கிலோ மீட்டருக்கு குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல் கிடைக்கப் பெற்றால், அதைக் கண்டறிவதற்காக நிலவின் அருகில் ஆர்பிட்டர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் இந்து மற்றும் இஸ்லாமிய மத குருக்கள் ‘சந்திரயான் 2’ மீண்டும் லேண்டருடன் தொடர்பு கொண்டு வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் இந்து மத குருவும், கிரிராஜ் சேவ சமிதியின் நிறுவனருமான முராரி அகர்வால் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் விநாயகரை கரைக்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் என்றும், ஆனால் இந்த முறை ‘சந்திராயன் 2’ வெற்றி வேண்டும் என வேண்டிக்கொண்டு அந்த விழா நடந்துள்ளதாக கூறினார்.
இதேபோன்று ஆக்ராவின் இஸ்லாமிய மதகுரு கூறும்போது, ‘சந்திரான் 2’ வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு, ஃபடேபூரில் சிக்ரியில் உள்ள சலீம் சிஸ்தி தர்காவில் அனைவருக்கும் துண்டு விரிப்பு வழங்குவதாக தெரிவித்தார்.