’இதுவல்லவா அர்ப்பணிப்பு’.. குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரைப் பணயம் வைத்த செவிலியர்! #Viralvideo
இமாச்சல் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக் கிராமத்தில், இரண்டு மாதக் குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதற்காக கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றை, ஒருவர் உயிரைப் பணயம் வைத்து கடந்துள்ளார்.
வெள்ளம், புயல், கனமழை என இயற்கைப் பேரிடர்களால் சில சமயங்களில் மக்கள் பெருமளவில் பாதிப்புகளை எதிர் கொண்டாலும், அவர்களைக் காப்பதில் அரசு தீவிரம் கவனம் செலுத்திகிறது. அரசுக்கு உறுதுணையாக காவல் துறையினர், ராணுவத்தினர், தீயணைப்புத் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் என இரவுபகலுமாகக் களப்பணியாற்றி வருகின்றனர். இக்கட்டான இந்த நேரங்களைத் தவிர்த்தும் அவர்களுடைய பணி அளப்பரியது. அந்த வகையில், கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையிலும், அந்த ஆற்றைக் கடந்துபோய் செவிலியர் ஒருவர் குழந்தை ஒன்றுக்கு தடுப்பூசி போட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இமாச்சல் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் சுதார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சௌஹர்காட்டி என்ற மலைக் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் குழந்தையின் தாய் ஒருவர், மழை காரணமாக தடுப்பூசி போட வர முடியாததால் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தைக்கு நோய் வந்துவிடுமோ என அஞ்சிய திக்கர் கிராமத்தில் வசிக்கும் கன்சர்வேடிவ் செவிலியரான கமலா தேவி, தானே அந்தக் கிராமத்திற்குச் செல்ல முடிவு செய்துள்ளார். ஆற்றின் நடுவே இருந்த பாறைகள் மீது துணிச்சலாகத் தாவி, தன் மருத்துவ உபகரணங்களுடன் அவர் ஆற்றைக் கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பேசிய கமலா, ”சுதார் பஞ்சாயத்தில் உள்ள சமூகச் சுகாதார மையத்திற்கு நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது, அந்தக் கிராமத்தில் இருந்து இரண்டு மாதக் குழந்தைக்கு உயிர்காக்கும் ஊசி போடுவதற்கான அவசர அழைப்பு வந்தது. தொடர் கனமழை காரணமாக அந்தப் பகுதியில் உள்ள நடைபாதைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனல், தனது பணி தினந்தோறும் போராட்டமாக மாறியுள்ளது. பெரும்பாலும் கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கமலா தேவியின் இந்த அர்ப்பணிப்புள்ள சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சிலர், முன்னணிப் பணியாளர்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பற்றாக்குறை குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுபோன்ற சூழல்களில் மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்காமல் இருக்க மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.