"ரூ.2,10,42,08,405 ..." | ஷாக் கரண்ட்டில் இல்லை... வந்த கரண்ட் பில்லில் தான்! அடேங்கப்பா...!
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வசித்து வரும் நபருக்கு டிசம்பர் மாதத்தின் மின்சாரண கட்டணம் ரூ. 210 கோடியாக வந்திருப்பது கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தவறுதலான எடுக்கப்படும் மின்சார கட்டணம் குறித்த பில் பேப்பர்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருவதை பார்க்கமுடிகிறது. ஆயிரக்கணக்கில் வரும் மின்சாரம் கட்டணம் என்பது லட்சத்தை தாண்டிவிட்டது என்பது குறித்தான நிறைய செய்திகளையும் கேட்டிருப்போம். ஆனால், ஹிமாச்சலில் நடந்த சம்பவம் ஒன்று, இது எல்லாவற்றையும்விட ஒருபடி மேலேதான் என்று சொல்ல வேண்டும்.
ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிர்பூர் மாவட்டம், பெஹர்வின் ஜட்டன் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர்தான் லலித் திமான். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் மின்சார கட்டணமாக ரூபாய் 210 கோடியாக அதாவது துல்லியமாக ரூ.2,10,42,08,405 என வந்துள்ளது... வழக்கமாக, மாதம் ரூ 2, 500 மட்டும் மின்சாரக்கட்டணமாக செலுத்தும் லலித்திற்கு இந்த கட்டணத்தை பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மின்சார அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
இதனை சோதனை செய்த அதிகாரிகள் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக, அதிக மின்கட்டணம் வந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர், சரியான கட்டணமான ரூ.4,047 - தை பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் , ’இப்படியெல்லாம் நடக்குமா?’ என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேப்போல கடந்த ஆண்டு, குஜராத்தின் வல்சாத் பகுதியில் உள்ள தையல்காரர் ஒருவர் தனது கடையின் சொத்து மதிப்பை விட அதிகமாக மின்கட்டணம் பெற்றுள்ளார். தனது மாமாவுடன் கடை நடத்தி வந்த அன்சாரிக்கு 86 லட்சம் ரூபாய் பில் தொகை வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், அதிகாரிகளிடம் தெரிவிக்க பின்னர் சரியான தொகை தெரிவிக்கப்பட்டது.