'இயற்கையின்றி எதுவும் இல்லை' - ட்வீட்டுக்குப் பின் இமாச்சல் நிலச்சரிவில் இறந்த பெண்
"வாழ்க்கையில் இயற்கையின்றி எதுவும் இல்லை" என்று பதிவிட்ட சில மணிநேரங்களிலே இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரில் இளம்பெண் உயிரை பறிகொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த 34 வயதான தீபா சர்மா நேற்று மதியம் 12.59 மணியளவில் இமாச்சலப் பிரதேசத்தின் நாகஸ்தி பகுதியின் எல்லையில், தான் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, ''பொதுமக்கள் செல்லக்கூடிய இந்தியாவின் கடைசி எல்லையில் நின்றுகொண்டிருக்கிறேன். இந்த எல்லையை தாண்டி சுமார் 80 கி.மீ தூரத்தில் திபெத் எல்லை உள்ளது. அதனை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது" என்று பதிவிட்டு இருந்தார். இதற்கடுத்த சில நிமிடங்களில் அதாவது, மதியம் 1.25 மணியளவில் ஒரு செய்தி வெளியானது.
கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ளது சங்லா பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஒரு டெம்போ வாகனம் மீது பாறைகள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பதுதான் அந்த செய்தி. இறந்த ஒன்பது பேரில் சில மணிநேரங்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்ட தீபா சர்மாவும் ஒருவர்.
ஆயுர்வேத பயிற்சியாளர், மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்ட தீபா சர்மா, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கு உதவும் வகையில் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தவர். பெண்கல்வியிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த கொரோனா தொற்றுநோய் காலக்கட்டத்திலும் திறம்பட பணியாற்றி வந்தவர். பல குடும்பங்களுக்கு இவர் நிறைய உதவி செய்துள்ளார்.
பயணம் செய்வதில் அதிக நாட்டம் கொண்டவர். அப்படித்தான் இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலா சென்றுள்ளார். இந்தநிலையில் தான் நிலச்சரிவினால் ஏற்பட்ட விபத்தால் உயிரை பறிகொடுத்துள்ளார். நிலச்சரிவில் தனது உயிரை இழப்பதற்கு முந்தைய நாள் கூட, இமாச்சல் பகுதியில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, ''வாழ்க்கையில் இயற்கையின்றி எதுவும் இல்லை" என்று பதிவிட்டு இருந்தார்.
இமாச்சலப் பிரதேசத்தில் சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக, மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக் கூடும் என ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கைக்கு மத்தியில்தான் நேற்று நடந்த விபத்தில் தீபா சர்மா உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகி இருக்கின்றனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பெரிய அளவிலான பாறைகள் விழுந்ததால் அப்பகுதியில் இருந்த ஆற்றுப்பாலம் விழுந்து தரைமட்டமானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்புப்பணிகளிலும் சிக்கல் இருந்தது என இமாச்சல் அரசு தெரிவித்துள்ளது.