கனவில் வந்த சிவன்: லிங்கம் எடுக்க நெடுஞ்சாலையில் பெரிய பள்ளம் தோண்டிய பக்தர்
தெலங்கானாவில் ஹைதராபாத்- வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் லிங்கம் இருப்பதாக மக்களை நம்பவைத்து 15 அடிக்கு பெரிய பள்ளம் தோண்டிய சிவ பக்தரும், உடந்தையாக இருந்த பஞ்சாயத்து தலைவரும் கைது செய்யப்பட்டனர்.
ஜான்கான் மாவட்டம் பெம்பார்தி கிராம் பகுதியில் ஐதராபாத்- வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் பூமிக்கு அடியில் சிவலிங்கம் மண்ணிற்குள் புதைந்து இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிவபக்தர் லாகான் மனோஜ் (வயது 30) கூறியுள்ளார்.
கனவில் கடவுள் சிவன் வந்து அப்பகுதியில் லிங்கம் புதைந்து கிடப்பதாகவும், அதை எடுத்து கோவில் கட்டி வழிபடுமாறும் கூறியதாக லாகான் மனோஜ் கூறியுள்ளார். இதனையடுத்து குறிப்பிட்ட அப்பகுதியில் ஹைதராபாத்- வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் பூஜை செய்து குழி தோண்டியுள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் அவருடைய பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நெடுஞ்சாலையில் தோண்டும் பணியைத் தொடங்கினர். ஊர் மக்களும் இணைந்து பள்ளம் தோண்டுவதை துரிதப்படுத்தினர். தோண்ட தோண்ட மண்ணைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் மனோஜ் அவ்வப்போது சாமி வந்தது போல், தோண்டுங்கல் விரைவில் சிவலிங்கம் கிடைக்கும் என்று கூறிக்கொண்டே இருந்துள்ளார். 15 அடி ஆழத்திற்கு பெரிய குழியாக வெட்டிய பிறகும் லிங்கம் கிடைக்கவில்லை. இதற்கிடையே சாலையில் டிராபிக் அதிகமானது. இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.
மனோஜ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோரை கைது செய்து அழைத்து சென்றனர். மனோஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் அப்பகுதியில் கண்டிப்பாக சிவலிங்கம் இருக்கும் என்று கூறிக்கொண்டே சென்றார்.