இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடா?: ராய்ட்டர்ஸ் நியூஸ் நிஜமா?

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடா?: ராய்ட்டர்ஸ் நியூஸ் நிஜமா?
இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடா?: ராய்ட்டர்ஸ் நியூஸ் நிஜமா?

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற செய்தி பெரும்பாலானோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இப்போது இந்தத் தகவலின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளது. 

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் குறித்து ஐநாவில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் 548 வல்லுநர்களிடம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியானது. பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பு, பாரம்பரிய நடைமுறைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் பல்வேறு நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்த ஆய்வில் இந்தியா எப்படி முதலிடம் பிடித்துள்ளது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

41 இந்தியர்கள் உட்பட 548 வல்லுநர்கள் கலந்து கொண்ட இந்த ஆய்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒரு ஆய்வை மேற்கொள்ள பல்வேறு நவீன வழிமுறைகள் வந்தபின் இதுபோன்ற ஆய்வு முறையை எப்படி தேர்வு செய்தார்கள்?, 548 வல்லுநர்களும் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என சிஎஸ்டிஎஸ்(CSDS) இயக்குநர் சஞ்சய் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஆய்வில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று கூறும் சஞ்சய் குமார், அரசாங்கங்களில் பல்வேறு அதிகாரப்பூர்வமான தகவல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.  மத்திய அரசும் ராய்ட்டர்ஸின் இந்தக் கருத்து கணிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட சில மனிதர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உண்மை தகவல்களின் அடிப்படையில் நடத்தப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய அமைச்சகம் ஒரு பெரிய அறிக்கையையே வெளியிட்டுள்ளது. அதில். “இந்தியாவிற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், பெண்களுக்கான உரிமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தை திருமணங்கள் வெகுவாக குறைந்துள்ளது” என மத்திய அரசு கூறியுள்ளது.  மற்றொரு புள்ளி விவரத்தையும் மத்திய அமைச்சகம் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. அதில், ஒரு லட்சம் மக்களில் எத்தனை பேர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்கள் என்ற அடிப்படையிலான ஆய்வில் இந்தியாவில் வெறும் 3 குற்றங்களே நடைபெறுகின்றன. ஆனால், அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 120 பேர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேபோல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி சசிதரூரும் ராய்ட்டர்ஸின் கணிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சில கசப்பான சம்பவங்கள் நடைபெறுவதை மறுப்பதற்கில்லை என்றும் அதனை வைத்துக் கொண்டு பெண்களுக்கு பாதுகாற்ற நாடு என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com