“ஏன் இந்தி மொழியை கற்க கூடாது?” உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி

“ஏன் இந்தி மொழியை கற்க கூடாது?” உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி
“ஏன் இந்தி மொழியை கற்க கூடாது?” உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி

“ஏன் இந்தி மொழியை கற்க கூடாது?” என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், "மத்திய அரசு இந்தியா முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை செயல்படுத்தும் போது இந்தியில் தான் பெயர் வைக்கிறார்கள். அந்த திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் அரசாணை, விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் மேற்படி இந்தி வார்த்தைகளில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுகிறார்கள். உதாரணமாக பிரதான் மந்திரி முந்த்ரா யோஜனா. இவ்வாறு தமிழில் எழுதுவதால் தமிழர்களுக்கு அதன் அர்த்தம் புரிவதில்லை.

தமிழில் எழுதி உள்ளதால் இந்தி மொழி மட்டும் அறிந்தவர்கள் படிக்க இயலாது. அதே போல் LIC நிறுவனம் தமது பாலிசிகளுக்கு இந்தி மொழியில் தான் பெயர்களை வைக்கிறார்கள். எனவே மக்கள் அனைவரும் எளிதில் திட்டங்களைப் புரிந்து கொள்ளும் வகையில், தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருக்கும் மற்றும் எதிர் வரும் நாட்களில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை தமிழ் மொழியில் மொழிப் பெயர்த்து அறிவிக்க உத்தரவிட வேண்டும்" என கூறி பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, "ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்ளதான். மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது. மொழியை மொழியாக கையாள வேண்டும்” என கருத்து தெரிவித்தனர்.

மேலும் மனுதாரர் விருப்பப்பட்டால் தமிழ் வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு துறை ஆகிய துறைகளிடம் மத்திய அரசின் திட்டங்களை மொழிபெயர்த்துத் தருமாறு கோரி தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பில், தமிழ் வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு துறைகளில் இது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com