குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - நீதிபதிகள்
நிலத்தடி நீரை எடுக்கும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகாவில் உள்ள பிடாரிதங்கல் கிராமத்தில் சட்டவிரோதமாக ஆழ் துளை கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும், இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து நடவடிக்கைஎடுக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்வதற்கும் உகந்தது எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். ஏதாவது ஒரு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தால் தான் அதை மற்ற ஆட்சியர்களும், அதிகாரிகளும் தானாக பின்பற்றுவார்கள் என தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தபோது சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும் எனவும் மாநிலத்தில் எந்த பகுதியிலும் நடக்காத வகையில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது என்பதற்காக சட்ட விதிகளை மீற முடியாது எனவும் சென்னை பெருநகர பகுதி நிலத்தடி நீர் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரியான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய செயலாளரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்தும் உத்தரவு
பிறப்பித்தனர்.
மேலும் தமிழகத்தில் நிலத்தடி நீர் எடுக்கப்படுவது தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவு பிறப்பித்து ஆகஸ்ட் 2ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.