உ.பி. போலீஸ் தேர்வில் ஹை-டெக் மோசடி: 14 பேர் கைது
உத்தரப்பிரதேச போலீஸ் தேர்வில் நடைபெற இருந்த ஹை-டெக் மோசடி தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தப்பிரேச மாநிலத்தில் 41,520 போலீஸ் இடங்களை நிரப்பவுதற்காக இன்று மற்றும் நாளை தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 23 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தேர்வில் நடைபெறவிருந்த ஹை-டெக் மோசடி தொடர்பாக 14 பேரை உத்தரப்பிரதேச சிறப்பு படை கைது செய்துள்ளது.
தேர்வில் மோசடி செய்வதற்கு அவர்கள் தந்திரமாக யோசித்தது தெரியவந்துள்ளது. அதாவது தேர்வு அறையில் இருக்கும் நபர் யாருக்கும் தெரியாமல் கேள்வித்தாள்களை படமெடுத்து அதனை வெளியில் உள்ள ஒருவருக்கு அனுப்புவது திட்டம். வெளியிலிருந்து கேள்வித்தாள்களை பார்க்கும் அந்த நபர், கேள்விக்கு சரியான விடையை சம்பந்தப்பட்ட நபருக்கு தாங்கள் வைத்த ரகசிய மைக் மூலம் அனுப்புவதுதான் அவர்கள் போட்ட பிளான். விடையை கண்டுபிடித்து மைக் மூலம் தெரிவிப்பவருக்கு ரூபாய் 5 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்விற்கு முன்னதாக போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பான விசாரணையை போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர்.