தொடர் விடுமுறை.... நிரம்பி வழியும் திருப்பதி....
எப்போதும் கூட்டம் அலைமோதும் திருப்பதியில் தொடர் விடுமுறை என்பதால் கூட்டம் பெருமளவு அலைமோதுகிறது.
திருப்பதியில் தற்போது பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதனைமுன்னிட்டு கட்டண தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் பக்தர்கள் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் அடைக்கப்படும் 32 அறைகளும் நிரம்பியுள்ள நிலையில், 200 பேர் நிரப்பப்படும் அறைகளில் 500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சர்வ தரிசனத்திற்காக நிற்கும் வரிசை ராமபட்சா பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கும் அளவிற்கு பக்தர்கள் 4 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் நிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கூட்டம் காரணமாக தேவஸ்தான விடுதிகளும்,
தனியார் விடுதிகளும் நிரம்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமி தரிசனத்திற்கு 2 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், முடி காணிக்கைக்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கும் மேல் ஆவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மட்டும் 81,012 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், 49,396 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பதி கோவில் உண்டியலின் நேற்றைய வசூல் ரூ.2கோடியே 77 லட்சம் எனவும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.