கனமழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை: மக்கள் அவதி
மும்பையில் கனமழை நீடிப்பதால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மும்பையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை நீடித்து வருகிறது. காலை 8.30 மணி முதல் 11.30 மணிக்குள் மூன்று மணி நேரத்தில் புறநகர் பகுதிகளில் 95.4 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மும்பையில் 298.6 மில்லிமீட்டர் மழையும் புறநகர் பகுதிகளில் 357.8 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடர் கனமழையால் மும்பை நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தாழ்வான பகுதிகள் மழைநீரில் மூழ்கின. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கி போயுள்ளது. கடல் அலைகளும் சீற்றத்துடன் காணப்படுகின்றன. கடற்கரையை ஒட்டிய சில இடங்களில் கடல்நீர் உட்புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நீர் நிலைகள் நிரம்பி இருப்பதால் அதன் அருகில் வசிப்போர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தானே, ராய்காட் போன்ற கடலோர மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்து வருகிறது. இங்கு சாலை ஒன்று திடீரென உள்வாங்கியதால் பதற்றம் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நவி மும்பை, தாராவி, பாந்த்ரா, கல்யாண், செம்பூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. ஏற்கெனவே கொரோனாவின் பிடியில் சிக்கி இருக்கும் மும்பை மக்களுக்கு கனமழை மேலும் தலைவலியை கொடுத்துள்ளது. இதனிடையே அடுத்தடுத்த நாட்களில் மழை குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

