சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
டெல்லியில் பலத்த சூறைக்காற்றுடன் அதிகாலை 3 மணி முதல் சாரல் மழை பெய்து வருவதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரப்பில் டெல்லியில் மணிக்கு 60 முதல் 90 கி.மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை முதலே சூறைக்காற்றுடன் டெல்லியில் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் கால தாமதமாக புறப்படும் என விமான நிறுவனங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் வருகை தாமதமாகி உள்ளதாகவும் 2 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பல்வேறு விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர். டெல்லி விமான நிலையத்திலிருந்து காலதாமதமாக புறப்படும் விமானங்களின் பயண நேரங்கள் குறித்து முன்பதிவு செய்யப்பட்டுள்ள விமான நிறுவனங்களின் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் இடமும் டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் சாரல் மழை பெய்ததால், அங்கு இதுநாள் வரை நிலவிவந்த கடுமையான வெப்பநிலை குறைந்து உள்ளது. டெல்லி உட்பட வடமாநிலங்களில் கடுமையான வெப்பம் பதிவாக்கி வந்தது. கடந்து சில தினங்களுக்கு முன்பு 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்நிலையில் தற்போது அங்கு சூறைக்காற்று வீசிவருகின்றது. சூறைக்காற்று காரணமாக டெல்லியில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் கண்டோன்மெண்ட், தவுலக் கான் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று வேலை நாள் (திங்கட்கிழமை) என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக் கருதி டெல்லி போக்குவரத்து போலீசார் முன்கூட்டியே சாலைகளை மாற்றுவழியில் திருப்பி விடுகின்றனர். இன்று காலை 9 மணி வரை மழை நீடிக்கலாம் எனவும் அதன் பின்னர் மழை இருக்காது, பின்னர் இன்று மாலை மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.