கர்நாடகத்தில் தேர்தல் அன்று கன மழைக்கு வாய்ப்பு
கர்நாடக மாநிலத்தில் வரும் 12ஆம் தேதி கடும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அம்மாநில பேரிடர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் எதிர்வரும் 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு மாநிலங்களில் நடைப்பெற்ற தேர்தலில் பாஜகவின் கையே ஓங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துள்ளது. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் அரியணையில் ஏற வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. காங்கிரஸ் தலைமை கர்நாடகத்தில் மையம் கொண்டுள்ளது . ராகுல்காந்தி, சோனியா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் பாஜகவும் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையை உயர்ந்தும் நோக்கில் களம்கண்டுள்ளது.பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
இந்நிலையில் கர்நாடகத்தில் தேர்தல் தினத்தன்று கடும் மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக அம்மாநில பேரிடர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாக்காளர்கள் முடிந்த வரையில் பிற்பகல் 3 மணிக்கு முன்பாக வாக்களித்து விடுங்கள். பிற்பகலுக்கு பின் கடுமையான மழை வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.