வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கிட்டத்தட்ட 370-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளதால் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு பலதரப்பில் இருந்தும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. கடலோர ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.