கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் 25 பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக கொச்சி சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டுப் பேசியுள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில், மத்திய அரசு கேரள மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்றும், மாநிலத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.

