வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தம்பதி : திக்திக் வீடியோ
பவானி ஆற்றின் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்ட தம்பதியினரை கயிறு மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு, கேரளா மாநிலம் வழியாக சென்று மீண்டும் தமிழக பகுதிக்குள் வருகின்றது. கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் செல்லும் பவானி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் அட்டப்பாடி பகுதியில் உள்ள தாவளம் இடத்தில் உள்ள தரைப்பாலத்திற்கும் மேலாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்று காலை சாவடியூர் தரைப்பாலத்தை கடந்த தம்பதியினர் இருவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீர் ஓட்டத்தில் ஒதுங்கி மரத்தில் சிக்கி இருந்த இருவரையும், கயிறுக்கட்டி மீட்டனர். அவர்களை மீட்கும் நேரம் காண்பவர்களை உறையவைத்தது. இந்தத் தண்ணீர் பில்லூர் அணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் வழியாக செல்கின்றது.