தேர்தல் முடிவுகள் வெளியீடு : இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு
மக்களைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் வன்முறை ஏற்பட்டால் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக மாநில உள்துறை செயலாளர்கள், டிஜிபிக்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது. வாக்கு எண்ணிக்கையால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், அந்தந்த மாநிலங்களில் பொது அமைதியை பாதுகாக்க அத்தனை நடவடிக்கையையும் எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் இன்று இந்தியா முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பதட்டமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் துணை ராணுவப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள மாநிலங்களின் அனைத்து தலைநகரங்கள், பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்கள், கட்சி அலுவலங்கள் ஆகிய இடங்களில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குகள் எண்ணப்படும் மையங்களிலும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.