எருமேலியில் 'பேட்டை துள்ளல்': ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் எருமேலியில் பேட்டை துள்ளலுக்காக வரும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலைக்கு தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். குமுளியில் இருந்து நேராக பம்பை சென்று சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் உள்ளனர். அதோடு, பம்பைக்கு இடையில் உள்ள கோட்டயம் மாவட்டம் எருமேலி சென்று அங்கு சிறப்பு பெற்ற "பேட்டை துள்ளல்"லில் பங்கேற்று செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமாக உள்ளனர். குறிப்பாக முதலாமாண்டு சபரிமலை செல்லும் பக்தர்கள் எருமேலி வந்து செல்கின்றனர்.
எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி தினமும் நடந்தாலும், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கிற்கு முந்தைய 12ம் தேதி நடக்கும் அம்பலப்புழா குழுவினரின் பேட்டை துள்ளல் சிறப்பு பெற்றதாகும். அன்றோடு பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும் நிறைவடைகிறது.
தற்போது பேட்டை துள்ளலுக்காக, எருமேலிக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. இதற்காக ஐயப்ப பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தவிர, எருமேலியில் உள்ள சாஸ்தா கோவிலில் ஐயப்ப பக்தர்களுக்காக குளியல் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.