புதுச்சேரி: கடல் சீற்றத்தால் பாரடைஸ் கடற்கரை கடுமையான சேதம் - கடலில் இறங்க தடை

புதுச்சேரி: கடல் சீற்றத்தால் பாரடைஸ் கடற்கரை கடுமையான சேதம் - கடலில் இறங்க தடை
புதுச்சேரி: கடல் சீற்றத்தால் பாரடைஸ் கடற்கரை கடுமையான சேதம் - கடலில் இறங்க தடை

புதுச்சேரியில் கடல் சீற்றம் அதிகரித்ததன் காரணமாக பாரடைஸ் கடற்கரை கடுமையாக சேதமடைந்ததால் அரசு சுற்றுலாத்துறைக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, வட தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 280 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு, தென்கிழக்கே 290 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நேற்று முதல் புதுச்சேரி கடற்பகுதி கடும் சீற்றத்துடன் காணப்பட்டது, இதன் காரணமாக இன்று நள்ளிரவு பாரம்பரியமான பழைய துறைமுக பாலம் இடிந்து விழுந்தது.

புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியில் அமைத்துள்ளது வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவினர்களை கவரும் பாரடைஸ் கடற்கரையாகும். இந்த கடற்கரைக்கு நோணாங்குப்பம் அரசு சுற்றுலாத்துறை படகு குழாம் மூலம் பயணித்து சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று மாலை முதல் கடற்காற்று பலமாகவும், கடல் சீற்றத்துடனும் இருந்ததால் பாரடைஸ் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிழல் குடைகள், கூடாரங்கள் பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்டு கடல் நீர் அடித்து சென்றது. மேலும் கடற்சீற்றம் அதிகரித்ததன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்கும் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டதால், ஆழம் அதிகரித்ததன் காரணமாக இன்று விடுமுறை தினத்திற்காக கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கடலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் பாரடைஸ் கடற்கரையில் ஏற்பட்டுள்ள சேதத்தால் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறைக்கு பல லட்சரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடல் மேற்பரப்பில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com