டெல்லியில் இன்று இரவு முதல் 11 மணிக்கு மேல் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் காற்றுமாசுபாட்டினால் போக்குவரத்து சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 11 மணி முதல் டெல்லி எல்லைக்குள் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் நுழையக் கூடாது எனத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நவம்பர் 11ஆம் தேதி இரவு 11 வரை நீடிக்கும்.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி டெல்லியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் டெல்லி காற்று மாசு அளவு கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு காற்றின் மாசு அபாய கட்டத்தை நெருங்கிவிட்டதாக, தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால்தான் டெல்லியில் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் நுழைய தடைவிதித்து போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கனரக மற்றும் சரக்கு வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் டெல்லியின் காற்று மாசுபாட்டு மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பால் மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு மேல் பழைமையான வண்டிகள் டெல்லிக்குள் நுழையக்கூடாது என்ற தடை ஏற்கனவே அங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.