சஞ்சீவ் சதுர்வேதி தொடர்பான வழக்குகள் விசாரணை.. மேலும் 2 நீதிபதிகள் விலகல்
இந்திய வனப் பணி அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகள் விலகியுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை சதுர்வேதி தொடர்பான வழக்குகளிலிருந்து விலகியுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 13.
2007 முதல் 2012வரை ஹரியானா வனத்துறையில் நிகழ்ந்த பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் சஞ்சீவ் சதுர்வேதி. அதற்குப் பின் அவர் பணியிடை நீக்கம் செய்யப்ப்பட்டார். காவல்துறை அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குடியரசுத் தலைவரின் தலையிட்டதன் மூலம் சஞ்சீவ் அவருடைய பணியைத் திரும்பப் பெற்றார். பிற்காலத்தில் புகழ்பெற்ற ரமோன் மகசேசே விருதைப் பெற்றார்.
2013இல் அன்றைய ஹரியானா முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா மீது சஞ்சீவ் தொடர்ந்த வழக்கு விசாரணையிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார். பிந்தைய ஆண்டுகளில் சஞ்சீவின் பணி நியமனம், பணியிட மாற்றம் தொடர்பான வழக்குகளிலிருந்து இன்னொரு உச்ச நீதிமன்ற நீதிபதி, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள், ஷிம்லா விசாரணை நீதிமன்ற நீதிபதி ஒருவர், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் 7 நீதிபதிகள், தீர்ப்பாயத்தின் தலைவர் ஆகியோர் விலகியுள்ளனர்.