வைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..!
கர்நாடகாவை சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதலமைச்சர் குமாராசாமி நேரில் சென்றுள்ளார்.
கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் நீரால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அப்பகுதியை சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவரான கலேரா ஃபதே என்பவர், அதனை வீடியோவாக பதிவு செய்ததோடு, தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னை குறித்தும் வீடியோவில் விளக்கமாக பேசியிருந்தார். தங்கள் பகுதிக்கு மட்டும் முதலமைச்சர் குமாரசாமி அநீதி இழைப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்த நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. அதுமட்டுமில்லாமல் முதலமைச்சரின் கவனத்திற்கும் சென்றது.
அதனடிப்படையில், குடகு பகுதிக்கு சென்ற முதலமைச்சர் குமாரசாமி பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதோடு, அந்த மாணவரையும் சந்தித்தார். அப்போது குடகு பகுதிக்கு வந்தமைக்காக குமாரசாமிக்கு அம்மாணவர் தனது நன்றியினை தெரிவித்தார். இதற்கு முன் இருந்த முதலமைச்சர்கள் எல்லோரும் குடகு பகுதிக்கு வர மறந்துவிட்டதாகவும், நீங்கள் வந்ததற்கு நன்றி என்றும் முதலமைச்சர் குமாரசாமியிடம் அம்மாணவர் கூறினார். இதனிடையே அந்த வீடியோ வெளியாகவில்லை என்றாலும் கூட, அப்பகுதிக்கு நான் சென்றிருப்பேன் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
குடகு பகுதியில் ஜூனியர் கல்லூரி திறக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் குமாரசாமியிடம் கலேரா ஃபதே வலியுறுத்தியிருந்தார். இது குறித்து பேசியுள்ள பொதுப்பணித் துறை அமைச்சர், மாணவரின் கோரிக்கை ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என கூறியுள்ளார்.