சுயேச்சையால் வீண் செலவு: போட்டியிட தடை கோரி மனு!
தேர்தலில் சுயேச்சைகள் போட்டியிட தடை விதிக்க கோரிய மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், டெல்லி மாநில பா.ஜ.க செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியடைவோம் என தெரிந்தும் சுயேச்சையாக பலர் போட்டியிடுகிறார்கள். இதனால், தேர்தல் முறையில் நிலையற்ற தன்மையும் தேர்தல் கமிஷனுக்கும் அதிக செலவும் ஏற்படுகிறது. இதனால் சுயேச்சையாக போட்டியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
மேலும், தேர்தலில் ஒருவரே 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் இயற்ற வேண்டும் என 2004ம் ஆண்டில் அப்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் பரிந்துரைத்தார். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் டங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.