ஹாத்ரஸில் 121 உயிரிழப்புகளுக்கு விஷம் தெளித்தது காரணமா? போலே பாபாவின் வழக்கறிஞர் சொன்ன பகீர் தகவல்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் உயிரிழப்புகள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளூர் மக்களை சந்தித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஹாத்ரஸ் உயிரிழப்புகள்
ஹாத்ரஸ் உயிரிழப்புகள்pt web

செய்தியாளர் ராஜீவ்

இரண்டு மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை

உத்திரபிரதேச மாநில ஹாத்ரஸில் ஜூலை 2 ஆம் நடந்த மத நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளூர் மக்களை சந்தித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரிஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் அமைக்கப்பட்ட நீதி விசாரணை ஆணையத்தில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஹேமந்த் ராவ் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பவேஷ் குமார் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இக்குழு இன்று நேரில் ஆய்வு செய்தது. இது குறித்து ஸ்ரீ வஸ்தவா கூறுகையில், “சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளோம்; இரண்டு மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் மற்றும் நேரடி சாட்சியங்களையும் விசாரிக்க உள்ளோம். இது குறித்து விரைவில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பொதுவெளியில் அறிவிப்பை வெளியிட உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

விஷம் தெளித்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலா?

விசாரணைக்காக ஹாத்ரஸ் சென்றுள்ள இந்த குழு, பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் முகாமிட்டு விசாரணையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தேவபிரகாஷ் மதுகர் உட்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட வரம்பான 80,000ஐ விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட நிகழ்வில், நிதி திரட்டுவது மற்றும் முக்கிய அமைப்பாளராக மதுகர் இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், “இந்த நிகழ்ச்சியில் மக்களிடையே ஊடுருவிய 15-16 பேர் கொண்ட குழு விஷம் தெளித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது” என்று சாமியார் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏபி சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலைத் தூண்டிய பிறகு சதிகாரர்கள் குழு அந்த இடத்தை விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், முதல் கட்ட விசாரணையில் அங்கு கூடியிருந்த மக்கள் போலே பாபா நடந்து சென்ற பாதையில் இருந்து காலடி மண்ணை சேகரிக்க விரைந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஹாத்ரஸ் சென்ற விசாரணை ஆணை குழு

இந்த சம்பவம் குறித்து சூரஜ் பால் சிங் எனப்படும் போலே பாபா கூறுகையில், “குழப்பத்தை உருவாக்கியவர்கள் தப்ப மாட்டார்கள், ஜூலை 2-ம் தேதி நடந்த சம்பவத்தால் நான் மிகவும் வருந்துகிறேன். இந்த வலியைத் தாங்கும் சக்தியை கடவுள் எங்களுக்குத் தரட்டும். அரசு மீதும் நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கை வையுங்கள். குழப்பத்தை உருவாக்கியவர்கள் தப்ப மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். தனது வழக்கறிஞர் மூலம் உறுப்பினர்களை இழந்த குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் நின்று அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ோலே பாபா
ோலே பாபாகோப்பு படம்

இந்த நிலையில் மாநில அரசு அமைத்துள்ள விசாரணை ஆணை குழு ஹத்ராஸ் சென்று ஆராய்ந்துள்ளது. அங்கு இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உள்ளூர் மக்களின் ஆதரவு கோரும் வகையில், அவர்களிடம் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆதாரமாக சேகரிக்க உள்ளது. இது குறித்து விரைவில் பொது வெளியில் அறிவிப்பையும் வெளியிடவுள்ளதாக விசாரணை குழுவின் தலைவர் ஸ்ரீ வஸ்தவ தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com