இத்தனை ஆண்டுகள் ஏமாற்றியதா பெப்சி? மத்திய அரசு பகிரங்க குற்றச்சாட்டு.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
FSSAI என அழைக்கப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த ஜூன் மாதம் அதிக கேஃபின் கொண்ட பானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ’இந்திய சட்டப்படி எனர்ஜி டிரிங்க் என்ற தனிப்பிரிவு கிடையாது, இவை கேஃபின் அடங்கிய பானங்கள் மட்டுமே’ என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும் நுகர்வோரை ஏமாற்றும் வகையில் இத்தகைய பானங்களில் 'எனர்ஜி டிரிங்க்' என்ற வார்த்தையையோ அல்லது 'உடலுக்கு ஆற்றல் தரும்' என்ற விளம்பரங்களையோ பயன்படுத்தக் கூடாது என்றும் ஏற்கெனவே அச்சடித்துள்ள லேபிள்கள் மற்றும் விளம்பரப் பொருட்களை 90 நாட்களுக்குள் சந்தையில் இருந்து முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த 90 நாள் கெடுவை எதிர்த்து பெப்சிகோ நிறுவனம் FSSAI-யிடம் முறையிட்டது. அதில், தங்களிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பழைய லேபிள்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள் இருப்பதாகவும், அவற்றை வீணாக்காமல் பயன்படுத்தி முடிக்க 12 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றும் கேட்டது.
ஆனால், இதனை FSSAI ஏற்க மறுத்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து பெப்சிகோ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நிறுவனங்கள் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் 'எனர்ஜி டிரிங்க்' லேபிள் ஒட்டப்பட்ட பழைய இருப்புப் பொருட்களைப் விற்பனை செய்யலாம் என்றும், புதிய பானங்களில் FSSAI-ன் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பெப்சிகோ நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து FSSAI அமைப்பு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் நோக்கில், பெப்சிகோ நிறுவனம் தனது அதிக காஃபின் கொண்ட 'அட்ரினலின் ரஷ்' (Adrenaline Rush) மற்றும் 'ஸ்டிங் எனர்ஜி' (Sting Energy) பானங்களை வேண்டுமென்றே 'எனர்ஜி பானங்கள்' என்று சந்தைப்படுத்தி விற்பனை செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசின் சட்டத் திட்டங்கள் குறித்து பெப்சிகோ நிறுவனத்துக்கு முன்னரே தெரிந்திருந்தும் அவர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற செயலில் ஈடுபட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நவம்பர் 6-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முக்கிய தீர்ப்பு அதில் வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

