சல்மான் கானை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்ததா பாகிஸ்தான்.. நடந்தது என்ன?
சமீபத்தில் சவுதி அரேபியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கான் பலூசிஸ்தான் குறித்து பேசியிருந்தார். அவரின் பலூசிஸ்தான் குறித்த பேச்சால் பயங்கரவாதிகள் பட்டியலில் சல்மான் கானை பாகிஸ்தான் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான் கான், நீங்கள் ஒரு இந்தி படத்தை தயாரித்து இங்கே வெளியிட்டால், அது சூப்பர்ஹிட்டாக இருக்கும். நீங்கள் ஒரு தமிழ், தெலுங்கு அல்லது மலையாள படத்தை தயாரித்தால், அது நூற்றுக்கணக்கான கோடி வியாபாரம் செய்யும், ஏனென்றால் மற்ற நாடுகளிலிருந்து ஏராளமானோர் இங்கு வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பலுசிஸ்தான் என பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் இங்கு பணியாற்றுவதாக கூறினார். இதில் பலுசிஸ்தானை தனிநாடாக குறிக்கும் வகையில் சல்மான் கான் பேசியது பாகிஸ்தானுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் சல்மான் கானை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. சில சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் செய்தித் தளங்கள், பாகிஸ்தானின் 1997 பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் நான்காவது அட்டவணையின் கீழ் சல்மான் கான் பெயர் சேர்க்கப்பட்டதாகக் கூறுகின்றன. இந்தப் பட்டியலில் இடம்பெறும் நபர்கள் பயங்கரவாத அமைப்பு அல்லது தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என சந்தேகப்படும் நபர்களாக கருதப்படுவார்கள்.
இந்த பட்டியலில் இடம்பெறுபவர்கள் கண்காணிப்பு வளையத்தில் இருப்பார்கள்.. அதுமட்டுமல்லாமல் , பயணத்தடை, சட்ட நடவடிக்கை போன்றவை அவர்களின் மீது பாயும்..
பலுசிஸ்தானை சேர்ந்த சில இயக்கங்கள் தனி நாடு கோரி போராடி வரும் நிலையில் இதற்கு பின்னால் இந்தியாவின் தூண்டுதல் உள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்ச்சை குறித்து சல்மான் கான் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. இதற்கிடையில், அவரது கருத்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, பேசிய ஒரு வாக்கியம் எல்லை தாண்டிய விவாதங்களைத் தூண்டும் அளவிற்கு பிரதிபலிக்கிறது.

