தலித் பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கொடூரக் கொலை
ஹரியானாவில் தலித் பெண்ணை திருமணம் செய்த காரணத்தால் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் அரோரா (25). பஞ்சாபி சமூகத்தை சேர்ந்தவரான இவர் தலித் பெண்ணை காதலித்து, ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தங்களது சமூகத்திற்கு பெரும் இழிவு ஏற்பட்டதாக எண்ணிய இரு வீட்டாரும், அந்த ஜோடியைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று அந்த பெண்ணின் சகோதரன் மற்றும் மாமா ஆகியோர், ஷியாம் அரோராவை கத்தியால் குத்தியுள்ளனர். தடுக்க சென்ற அந்த பெண்ணும் காயமடைந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரோரா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கத்தியால் 6 முறை பலமாக குத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த அப்பெண்ணிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பெண்ணின் அண்ணன் ஷயில் மற்றும் அவரது மாமாவை கைது செய்த போலீசார், இரு வீட்டாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக திருமணம் செய்துகொண்ட இவர்கள், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து 2 குடும்பங்களும் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பின்பு சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்படி இருந்தும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.