கருவின் பாலினத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் குற்றத்தில் ஹரியானா முதலிடம்..!
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து முன்கூட்டியே தெரியப்படுத்தும் குற்றத்தில் ஹரியானா முதலிடம் வகிக்கிறது.
இந்திய சட்டப்படி கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை முன்கூட்டியே கண்டறிந்து தெரியப்படுத்துதல் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளுதல் குற்றமாகும். பெண் குழந்தைகள் என தெரிந்தால் முன்கூட்டியே சில பெற்றோர்கள் கருவை கலைத்துவிடுகின்றனர். இது தவறான விஷயம். ஆண்- பெண் விகிதாசாரம் சமமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், பெண் குழந்தைகளின் நலன் கருதியும் இந்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மீறி முன்கூட்டியே அதனை தெரிவிக்கும் ஸ்கேன் சென்டர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து முன்கூட்டியே தெரியப்படுத்தும் குற்றத்தில் ஹரியானா முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதும் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தமாக 449 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் ஹரியானாவில் மட்டும் அதிகப்பட்சமாக 158 குற்றங்கள் பதிவாகியுள்ளன. ஹரியானாவில் மொத்தமாக 387 புகார்கள் வந்த நிலையில் அதில் 158 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக ராஜஸ்தான் மாநிலத்தில் 112 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 388 குற்றங்கள் பதிவாகியிருந்த நிலையில் இந்த வருடம் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியா மட்டுமில்லாமல் பெண் சிசுக்கொலை என்பது உலகளாவிய நிகழ்வாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியன் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.