ஹரியானா | பணிக்காலத்தில் அதிகமுறை இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி.. இன்றுடன் ஓய்வு!
1965, ஏப்ரல் 30ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர், அசோக் கெம்கா. இவர், 1988ஆம் ஆண்டு ஐஐடி கரக்பூரில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார், அதைத் தொடர்ந்து டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (TIFR) கணினி அறிவியலில் முனைவர் பட்டமும், வணிக நிர்வாகம் மற்றும் நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்ற எம்பிஏ பட்டமும் பெற்றார். பணியில் இருந்தபோதே, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டத்தையும் முடித்தார். பின்னர், ஐ.ஏ.எஸ்ஸில் தேர்ச்சிப் பெற்று 1991-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர், ஹரியானா அரசிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார். கிட்டத்தட்ட 34 ஆண்டுகால தன்னுடைய அரசுப் பணிக் காலத்தில் 57 பதவிகளை வகித்துள்ளார்.
நேர்மையான மூத்த ஐஏஎஸ் அதிகாரி எனப் பெயர் பெற்ற அசோக் கெம்கா, தற்போது போக்குவரத்துத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ளார். இதே பணியில் இருந்தபடியே அவர், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய குருகிராம் நில ஒப்பந்தத்தின் மாற்றத்தை 2012ஆம் ஆண்டு ரத்து செய்தபோது, இவர் தேசிய அளவில் வெளிச்சத்திற்கு வந்தார். அவரது பணிக்காலம் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான (57 முறை) இடமாற்றங்களால் குறிக்கப்படுகிறது. சராசரியாக ஆறு மாதங்களுக்கு ஓர் இடமாற்றம் என இருந்துள்ளது. இது ஹரியானாவில் வேறு எந்த அதிகாரியாலும் செய்யப்படாத அதிகபட்ச இடமாற்றமாகும். அவர் ஒவ்வொரு முறையும் மாற்றப்பட்டபோது, “நல்ல வளர்ந்த மரங்களே எப்போதும் முதலில் வெட்டப்படுகின்றன. அதில், எந்த வருத்தமும் இல்லை. எனினும் நான் புதிய துறையிலும் உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் இருப்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.