மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு கடந்த திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற்றன. 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. கடந்த தேர்தலில் 19 இடங்களை வென்ற இந்திய தேசிய லோக் தளம் கட்சியும் முக்கிய போட்டியாளராக களத்தில் உள்ளது. மொத்தம் 105 பெண்கள் உள்பட ஆயிரத்து 169 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இதில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்களை விட அதிக இடங்களில் அந்தக் கட்சி முன்னிலையில் இருக்கிறது. காலை 8.45 மணி நேர நிலவரப்படி, பாஜக 55 இடங்களிலும் காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்றவை 6 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில், 235 பெண்கள் உள்பட 3,237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் பாஜகவும், சிவசேனாவும் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் களமிறங்கின. பாஜக 152 இடங்களிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், காங்கிரஸ் 145 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 123 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டன. இங்கும் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.