ஹரியானாவில் திருமணம் செய்வதற்காக நீதிமன்றம் வந்த தம்பதியினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஹரியானா மாநிலத்தில் 25 வயதான ஆணும், 27 வயதான பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் திருமணம் செய்வது குறித்து முடிவெடுத்த வேளையில் பெண் வீட்டாருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த ஜோடியினர் நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
இதற்காக புதன்கிழமை அன்று நீதிமன்றத்திற்கு வரும் வழியில் மகர்ஷி தயானந்த் பல்கலைக்கழகத்திற்கு அருகே வந்த காதல் தம்பதியினரை வழிமறித்த சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான இளைஞருடன் வந்த அவரது சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. பட்டப்பகலில் காதல் தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.