பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சைக்கருத்து கூறிய ஹரியானா முதல்வர்

பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சைக்கருத்து கூறிய ஹரியானா முதல்வர்
பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சைக்கருத்து கூறிய ஹரியானா முதல்வர்

பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய ஹரியானா முதலமைச்சருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்

கடந்த சில ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார் ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார். 

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் மனோகர்லால் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேசினார். அதில் ''பாலியல் வன்கொடுமைகள் இப்போது மட்டும் நடக்கவில்லை. முன்னரும் நடந்துள்ளன. இப்போதும் நடக்கின்றன. ஆனால், அது அதிகமாக தற்போது தான் வெளியே வருகின்றன. 80 முதல் 90 சதவிகித பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் சீண்டல் சம்பவங்கள் தங்களுக்குள் ஏற்கெனவே அறிமுகமான இருவருக்கு இடையில் தான் நடக்கின்றன'' என்று தெரிவித்தார். 

மேலும் ''சம்பந்தப்பட்ட இருவரும் நீண்ட நாட்களாகவே பழகி வருவார்கள். என்றாவது ஒருநாள் இருவருக்கும் இடையில் பிரச்னை வரும்போது, அந்தப் பெண் பலாத்கார வழக்கு பதிவு செய்வார்'' என்று தெரிவித்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியது. முதலமைச்சர் மனோகர்லாலின்  பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

(ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார்)

இந்நிலையில் முதலமைச்சர் மனோகர்லாலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ''ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே பாலியல் வன்கொடுமைகள் குறித்து இப்படி சிந்தித்தால். அம்மாநிலத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக  இருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

(டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்)

ஹரியானாவில் கடந்த செப்டம்பர் மாதம் 19 வயது பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com