ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் காணும் வினேஷ் போகட் பரப்புரையை தொடங்கியுள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் ஐந்தாம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார். ஞாயிற்றுக்கிழமை கேரா பக்தா கிராமத்தில் அவர் தனது பரப்புரையை தொடங்கினார்.
இது வினேஷ் போகாட்டின் கணவர் சோம்வீர் ராட்டியின் சொந்த ஊராகும். ஆகவே, அவர் அங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்குவதாகவும், தங்களுடைய மருமகளின் வெற்றிக்கு அந்தப் பகுதியில் உள்ள பஞ்சாயத்துக்கள் ஆதரவு அளிக்கும் எனவும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். அங்குள்ள காப் என அழைக்கப்படும் 7 பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகளால் வரவேற்கப்பட்டார். பரப்புரையை தொடங்கிய வினேஷ் போகட் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமது மக்கள் தம்மை வெற்றிப்பெறச் செய்வார்கள் என கூறினார்.
அவர்கள் பார்வையில் தாம் ஒரு வெற்றியாளர்தான் என கூறிய வினேஷ் போகட், இதைவிட பெரியது எதுவும் இருக்கமுடியாது என கூறினார்.
ஜூலானா தொகுதி ஜாட் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி எனவும், வினேஷ் போகட் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பெருமளவு ஆதரவு கிட்டும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். வினேஷ் பிரபல மல்யுத்த வீராங்கனை என்பதாலும் அவர் மகளிர் ஆதரவு நடவடிக்கைகளுக்கு வலு சேர்ப்பார் என்பதாலும் அவருக்கு கூடுதல் வாக்குகள் கிட்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கணிப்பு.
அதேநேரம், வினேஷ் போகட்மற்றும் பஜ்ரங் பூனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மல்யுத்த சம்மேளனத்தின் அப்போதைய தலைவர் ப்ரிஜ் பூஷனுக்க்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்பதை காட்டும் விதமாக உள்ளது என பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். இருந்த போதிலும் ஹரியானாவை சேர்ந்த விளையாட்டு வீராங்கனையான வினேஷ் போகாட்டுக்கு எதிரான கருத்துக்கள், சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு எதிராக திரும்பலாம் என்பதால் அப்படிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என பாஜக தலைமை வலியுறுத்தி வருகிறது.