120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை
ஹரியானா மாநிலம் ஃபெடஹாபாத் மாவட்டத்தில் உள்ளது டோஹானா. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பாபா அமர்புரி என்ற பில்லு. இவர் ஒரு மந்திரவாதி. குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இவரைத் தேடி, பெண்கள் வருவது வழக்கம். மந்திர தந்திரத்தால் அதைத் தீர்த்து வைக்கிறேன் என்று ஆரம்பத்தில் மேஜிக் காட்டுவாராம் அமர்புரி. அதைப் பார்க்கும் பெண்கள், ‘ஆஹா பெரிய மந்திரவாதிதான்’ என்று நம்பிவிடுவார்கள். இதை வைத்து பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வார் அமர்புரி. அதை, தானே செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொள்வதும் அவரது வழக்கம். இப்படியே ஒன்று இரண்டல்ல, சுமார் 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பிறகு திடீரென்று பாதிக்கப்பட்ட பெண்களில் யார் ஞாபகத்துக்கு வருகிறாரோ, அவருக்கு போன் செய்வார். ‘என்னை வந்து சந்திக்க வேண்டும், இல்லையென்றால் உனது வீடியோ என்னிடம் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன்’ என்று மிரட்டுவார். வேறு வழியே இல்லாமல் அந்தப் பெண்ணும் செல்வார். மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்வார். இதை ஒரு தொழிலாகவே செய்து வந்துள்ளார் இந்த மந்திரவாதி.
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன், இவர் மீது ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார். அதில், ‘என் கணவருக்கு தெரிந்தவர் அமர்புரி. அடிக்கடி அவரை சந்தித்ததால் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் அவரது கோயிலுக்கு வருமாறு அழைத்தார். சென்றேன். கோயிலில் வைத்தே என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் அவரை சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர் ஜாமினில் அவர் வெளியே வந்தார்.
இந்நிலையில், அவர் மீது இப்போது சில பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவர் 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து எடுத்து வைத்திருந்த வீடியோ காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ஃபெடஹாபாத் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிம்லா தேவி கூறும்போது, ‘மந்திரவாதியிடம் இருந்து 120-க்கும் அதிகமான வீடியோ காட்சிகளை கைப்பற்றப்பட்டுள்ளன. அவரிடம் மேலும் விசாரணை நடந்துவருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரிடம் பேசிவருகிறோம்’ என்றார்.
அமர்புரி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, அந்த மந்திரவாதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதனையடுத்து, விடுதலை செய்யப்பட்ட மந்திரவாதி, போலீசார் தன் மீது போலியான குற்றச்சாட்டுகளை புனைகிறார்கள் என்று கூறினார். போலீசாருக்கு லஞ்சம் கொடுக்கவில்லை என்பதற்காகவே அவர்கள் இப்படி செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தன்னுடைய உண்மையான பெயர் அமர்வீர் என்றும் அவர் கூறியுள்ளார்.