அதிகரிக்கும் கொரோனா : 11 மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை
நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் 11 மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்துகிறார்.
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள் கலந்துகொள்ளும், காணொலி காட்சி வழியாக இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்குகிறார்.
சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின்படி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 81.90 சதவீதம் இந்த 11 மாநிலங்களில் பதிவாகி வருகிறது. மேலும் மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் நாட்டில் சிகிச்சையில் உள்ள மொத்த பாதிக்கப்பட்டோரில் 75.88 சதவீதத்தை கொண்டுள்ளது. அதுபோல நாட்டில் சிகிச்சையில் உள்ள ஒட்டுமொத்தமானவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிராவில் மட்டும் 58.23 சதவீதம் பேர் உள்ளனர் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 96,982 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,25,89,067 -லிருந்து 1,26,86,049 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 446 பேர் பலியாகினர். நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,65,101 -லிருந்து 1,65,547 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 8,31,10,926 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 43,00,966 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 50,143 பேர் குணமடைந்தனர். நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,16,82,136 -லிருந்து 1,17,32,279 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,88,223 ஆக அதிகரித்துள்ளது.