2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்ததலில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக அங்கு பரப்புரை மேற்கொள்வேன் என ஹர்த்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் படேல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருபவர் ஹர்த்திக் பட்டேல். பதிதார் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவர் மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியுள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்த்திக் பட்டேல், மம்தா பானர்ஜி தன்னை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொள்வேன் என்றும் கூறினார். மேலும் வரும் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது, மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள உள்ளேன் என்றும் ஹர்த்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மம்தா பானர்ஜியும், ஹர்த்திக் பட்டேலை வெகுவாக புகழ்ந்திருக்கிறார். ஹர்த்திக் பட்டேல் தன் இளைய சகோதரர் போன்றவர் என கூறியுள்ள மம்தா பானர்ஜி, அவருக்கு அரசியலில் நுண்ணறிவு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுமட்டுமில்லாமல் ஹர்த்திக் பட்டேல் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமானவர் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

