“என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்” - தாய் உருக்கம்
தன்னுடைய மகனை வேண்டுமென்றால் தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் என்று குஜராத் மக்களுக்கு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இளைஞனின் தாயார் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றும் அதன் பின்விளைவுகள் உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை உலுக்கியுள்ளது. ஒரு கொடூரமான சம்பவம் அச்சத்தை ஊட்டக்கூடிய வன்முறைக்கு வித்திட்டுள்ளது. கும்பல் தாக்குதல் என்ற மற்றொரு கொடூரத்திற்கு வழிவகுத்துவிட்டது. பாலியல் வன்கொடுமை எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல், சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து பிற மாநில மக்கள் மீது வன்முறையில் ஈடுபடுவதையும் தான். இதனால், எத்தனை பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் முடங்கியுள்ளது. ஒரு மாநிலத்தில் வேலை பார்க்கும் பிற மாநிலத்தவர் அச்ச உணர்வுடன் இருப்பது இந்திய நாட்டின் இறையாண்மைக்கே ஆபத்தானது. இது எந்த மாநிலத்தில் நடந்தாலும் அது அநியாயம் தான்.
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பீகார் இளைஞனின் தாயார் விடுத்துள்ள கோரிக்கையும் இந்த பிரச்னையின் வீரியத்தை நமக்கு உணர்த்துகிறது. “என் மகன் குற்றம் செய்திருந்தால் அவனை தூக்கிலிடுங்கள். ஆனால், என் மகன் செய்த பாவத்திற்கு மற்ற பீகார் மக்கள் மீது தாக்குதல் நடத்தவோ, வெளியேற்றவோ வேண்டாம்” என்கிறார் கூலித் தொழிலாளியான அந்த தாய் ராமாவதி தேவி. தன்னுடைய மகன் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டதாக ஊடகங்களின் முன்பு அவர் உருக்கமாக பேசினார்.
“என் மகன் ஒரு மைனர். சில நேரங்களில் மனநிலை பாதிக்கப்பவன் போல் சமீப காலமாக நடந்து வருகிறான். அவன் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. நான்கு சகோதரர்களில் இவன் மூன்றாவது பிறந்தவன். இரண்டு வருடங்களுக்கு முன்பு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் குஜராத்திற்கு தனது நண்பர்களுடன் சென்றுவிட்டான். அவன் எங்கிருக்கிறான் என்பதே சில மாதங்களுக்கு முன்பு தான் தெரிந்தது” என்கிறார் தந்தை சவாலிய ஷா.