“நிலையான ஆட்சியை அளிக்க வேண்டிய கடமை பாஜகவிற்கு உள்ளது” - ஹெச். ராஜா
மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை அளிக்க வேண்டிய கடமை பாஜகவிற்கு உள்ளது என்று ஹெச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து கடந்த ஒரு மாதமாக நிலவிய இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணி ஆட்சியமைப்பது குறித்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இடையே பல்வேறு கட்டங்களாக பேச்சுக்கள் நடந்த நிலையில், மும்பையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
3 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு பின் நேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக ஏற்பதில் 3 கட்சிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
3 கட்சிகளின் சார்பில் மும்பையில் செய்தியாளர் சந்திப்பு நடக்க உள்ளதாகவும் இதில் ஆட்சியமைப்பது தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் சரத் பவார் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி திடீரென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சராக, பாஜவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இன்று காலை பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் துணை முதலமைச்சராக பதவி யேற்றார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சியை பாஜக அமைத்துள்ளது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவிற்கு மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சி அளிக்க வேண்டிய கடமை உள்ளது. மேலும் உடனடியாக தேர்தல் வருவதையும் தவிர்க்க வேண்டும். தனது கடமையை சரியாக நிறைவேற்றி முதல்வர் பொறுப்பேற்றுள்ள ஃபட்னவிஸுக்கு வாழ்த்துகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.