
பிரதமர் குறித்த விமர்சனங்களுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். இதனையடுத்து நாட்டு மக்களின் ஒற்றுமையை பறைசாற்ற அனைவரையும் அகல் விளக்குகளையும் ஏற்ற கோரிக்கை வைத்தார். அதன் படி நாட்டு மக்களும் அகல் விளக்குகளை ஏற்றினர். ஆனால் இதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்தன. நடிகர் கமல்ஹாசனும் தனது வருத்ததை கடிதம் மூலமாக பிரதமருக்கு தெரிவித்தார்.
இதனிடையே நெட்டிசன் ஒருவர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் “ பெரும்பாலான மக்கள் இந்தியாவின் பிரதமர் தோற்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அது எப்படியாவது நடக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதன் பிரதிபிம்பமே சமூக வலைதளங்களில் நிலவி வரும் பிரதமர் குறித்த கேலிகளும் கிண்டல்களும், கடிதங்களும். அவர்கள் அனைவரும் பிரதமரை தோற்கடிக்க நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்திய நாட்டையே அவர்கள் தோற்கடிக்க முயல்கின்றனர் என்பதுதான் அர்த்தம். இது அவமானம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் “ நான் இதை முழுவதுமாக ஒத்துக்கொள்கிறேன் நண்பா” எனக் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தற்போது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் “கொரோனா பாதிக்கப்பட்ட பல நாட்டின் அரசுகள் அவசரகால அதிகாரங்களை கையிலெடுத்துள்ளனர். அரசை விமர்சிக்க முடியாது. உடனே சிறைதான். ஆனால் இங்கு மோடிக்கு கொரோனா இருக்கிறது. டெஸ்ட் பண்ணுங்க அப்படின்னு பேசமுடியும். இல்லாத பிரச்சனைகளை உள்ளதாக விவாதிக்க முடியும். ஒன்னுமே புரியாத கடிதமும்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் இவர் யாரை குறிப்பிடுகிறார் என்ற விவாதம் சமூக வலை தளங்களில் காரசாரமாக நடந்து வருகிறது.