ஏபிவிபி மிரட்டல்: டெல்லியை விட்டு வெளியேறிய மாணவி
ஏபிவிபி (ABVP) மாணவர் அமைப்புக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததால் சமூக வலைதளங்களில் மிரட்டலுக்கு ஆளான பெண் டெல்லியை விட்டே வெளியேறிவிட்டார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி குர்மெஹர் கர், கார்கில் போரில் தனது தந்தை உயிரிழந்தது குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் தனது தந்தையை கொல்லவில்லை என்றும் போர்தான் கொன்றது எனவும் அவர் கூறியிருந்தார். அதேபோல், தேசியவாதம் என்கிற பெயரில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வன்முறைகளை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
ஏபிவிபி மாணவர் அமைப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளை கூறி வந்தவரை கிரிக்கெட் வீரர் சேவாக் உள்ளிட்டோர் விமர்சித்தனர். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவாய் என தனக்கு மிரட்டல் வந்ததாக அந்தப் பெண் கூறி இருந்தார். டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும், எதிர்க்கட்சியினரும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இத்தகைய சூழலில் ஏபிவிபிக்கு எதிரான பரப்புரையை முடித்துக் கொள்வதாகவும் டெல்லியை விட்டு வெளியேறுவதாகவும் குர்மெஹர்கர் அறிவித்துள்ளார்.