இந்தியா
'மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்குவதாக கூறி துன்புறுத்துகிறார்”- மாமியார் மீது மருமகள் புகார்
'மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்குவதாக கூறி துன்புறுத்துகிறார்”- மாமியார் மீது மருமகள் புகார்
தினமும் மதியச் சாப்பாடு முடித்துவிட்டு தூங்குவதாகக் கூறி கொடுமைப்படுத்துவதாக மாமியார் மீது மருமகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாஹிபாக் பகுதியில் 24 வயதான பெண் ஒருவர் தனது கணவர், குழந்தை மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாமியாரும், கணவரும் சேர்ந்து அந்த பெண்ணை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக அந்த பெண் பகல் நேரத்தில் சாப்பிட்டுவிட்டு உறங்கினால் அது பிடிக்காமல் அவரது மாமியார் அவரை அடித்து துன்புறுத்தி வருவதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே இந்த பிரச்சினைக்காக காவல் நிலையம் வரை சென்று, போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்த சம்பவமும் நடந்துள்ளது. மேலும் ஆண் குழந்தையை பெற்றெடுக்காமல் பெண் குழந்தை பெற்றதற்காகவும் அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மனைவியாக சேர்த்துக்கொள்ள முடியாது எனக் கூறி, அந்த பெண்ணை அவரது கணவர் கைவிட்டு விட்டதாகக் தெரிகிறது. ஊர்த் தலைவர்கள் சமரசம் செய்ய முயன்றும் பலனளிக்கவில்லை. இதையடுத்து அந்த பெண் மாதவ்புரா காவல் நிலையத்தில், தனது கணவர் மற்றும் மாமியார் மீது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.