குடிநீர் இல்லை: குஜராத்தில் தேர்தலை புறக்கணித்த கிராமம்
அடிப்படை வசதிகள் செய்து தராததால் குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள், தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
குஜராத்தில் நேற்று முதல் கட்ட தேர்தல் நடைப்பெற்றது. பாஜக ஆட்சியை தக்க வைக்குமா இல்லை காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றுமா என ஊடகங்கள் பரபரப்பாக விவாதங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறி ஒரு கிராமமே தேர்தலை புறக்கணித்துள்ளது.
மேற்கு குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ளது கஜாதி கிராமம். நேற்று நடைப்பெற்ற தேர்தலில் இந்த கிராமத்தில் இருந்து ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. குடிநீர் பற்றாகுறை, சாலை வசதிகள் இல்லாதது, சீரான மின் விநியோகம் இல்லாதது போன்ற காரணங்களால் இந்த கிராம மக்கள் வாக்களிக்கவில்லை.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறும்போது, இக் கிராம மக்களின் பிரதான குறை குடிநீர் பிரச்சனை. அதனால் பைப்லைன் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் அது போதாது, மற்றொரு பைப்லைன் வேண்டும் என்று அவர்கள் கூறுவதாக தெரிவித்தனர். அதிகாரிகள் கிராமத்துக்குச் சென்று வாக்களிக்க செல்லும்படி அறிவுறுத்தியும் யாரும் வாக்களிக்க செல்லவில்லை என்று கூறப்படுகிறது.